ஹைதராபாத்: டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நேற்று (நவ.24) தேர்தல் ஆணையராக அருண் கோயலை அவசரகதியில் நியமித்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "எத்தனையோ தலைமை தேர்தல் ஆணையர்கள் வந்து சென்றுவிட்டனர். ஆனால் டி.என். சேஷனை போல நெஞ்சுரம் மிக்க ஒரு அதிகாரி இதுவரை வரவில்லையே" என முன்னாள் தேர்தல் ஆணையராக பணி புரிந்த திருநெல்லை நாராயண சேஷனை நினைவுக்கூறினர்.
யார் இந்த டி.என்.சேஷன்?
சேஷன் குறித்த தகவல்களை பெரும்பாலும் இந்த தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் 90-களில் தேர்தல் ஆணையத்தில் அவர் கொண்டுவந்த பல சீர் திருத்த செயல்முறைகள் இந்தியாவில் பல ஆளும் கட்சிகளின் அரசியல் போக்கை மாற்றியது. அனைவராலும் அறியப்படாமல் இருந்த சேஷன் நாடு முழுவதும் அறியப்பட்டார். 1990 முதல் 1996 க்கு இடையிலான காலகட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் 1932 ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி சேஷன் பிறந்தார். அன்றைய மெட்ராஸ் மாகாணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பாலக்காட்டில் பிறந்தார். இதனையடுத்து சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1954 ஆம் ஆண்டு சிவில் தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ஆட்சியராக பணியாற்றும் போதே பணியையும் பார்த்து கொண்டு ஹார்வார்டில் முதுகலைப்பட்டம் பெற்றார். பல அரசு பதவிகளை வகித்த போது சிறப்பாக பணியாற்றிய காரணத்தால் தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பிரச்சனைகளை முடிக்க தேர்தல் பிரச்சாரங்களுக்கு கட்டுப்பாடு:சேஷன் தேர்தல் அதிகாரியாகவதற்கு முன்பு வரை மத்திய அரசின் கீழ் தான் தேர்தல் ஆணையம் இருந்தது. தேர்தல் நடக்கும் சமயத்திலும் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்தன. இந்த நிலையை உடைத்து பிரச்சாரங்களுக்கு தேர்தல் நாளுக்கு முன்பாகவே தடை விதித்தார். மேலும் அதுவரை அமைதியாக நடத்தப்படாத உத்தரபிரதேச தேர்தலையும் எந்த கலவரமும் இல்லாமல் அமைதியான முறையில் நடத்தி முடித்தார்.
மேலும், கட்சித் தலைவர்கள் வாக்காளர்களை வாக்குசாவடிக்கு அழைத்து செல்வதற்கும், சட்ட விரோதமாக விநியோகிக்கப்படும் மதுபானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. தேர்தல் நாளுக்கு முன்பாகவே சுவர்களில் செய்த விளம்பரங்களை அளிக்கவும் உத்தரவிட்டார். போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் அவர்களின் செலவினங்களின் முழு கணக்குகளையும் சுயாதீன அரசாங்க ஆய்வாளர்களின் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கினார்.
சேஷனின் அதிரடி நடவடிக்கைகளால் அதிர்ந்த அரசியல்வாதிகள் தேர்தல் நடத்தும் முறையில் மாற்றம்:மத அடிப்படையிலான தேர்தல் பிரச்சாரத்தை சேஷன் தடை செய்தார். வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல், தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பிற மாநிலங்களில் இருந்து தேர்தல் பார்வையாளர்களை நியமித்தல், அனுமதியின்றி மைக்குகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல் ஆகியவை சேஷன் மேற்கொண்ட மற்ற முக்கியச் சீர்திருத்த முயற்சிகளாகும்.
அரசியல்வாதிகளின் ஆணிவேரை ஆட்டிய சேஷன்: சேஷன் தேர்தலில் பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தாலும், இந்த நடவடிக்கைகள் அன்றைய அரசியல்வாதிகளுக்கு அதிருப்தியைதான் கொடுத்தது. பல மிரட்டல்கள் சேஷனை நோக்கி வந்தன. பி.வி.நரசிம்மராவ் பிரதமராக பதவி வகித்த போது அவரது அமைச்சரவை உறுப்பினர்களான சீதாராம் கேசரி, கல்பநாத் ராய் ஆகியோர் வாக்காளர்களை மடைமாற்றம் செய்ததாக சேஷன் நேரடியாக குற்றம் சாட்டினார். மேலும் அவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஒருமனதாக பரிந்துரைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பல அரசியல்வாதிகளின் நேரடி கோபத்திற்கு சேஷன் ஆளானார். அக்காலக்கட்டத்தில் சேஷன் தனது வரம்புக்கு மீறி செயல்படுவதால் அவரை நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளும் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சேஷனை கட்டுபடுத்த முயன்ற நரசிம்மராவ்: சேஷனின் அதிரடி நடவடிக்கைகளால் அதிர்ந்த அரசியல்வாதிகளின் நெருக்கடியால் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் திடீரென 1993 ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்தை மூன்று உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக மாற்றினார். சேஷனைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக எம்.எஸ்.கில் மற்றும் ஜி.வி.ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கூடுதல் தேர்தல் ஆணையர்களாக நியமித்தனர். இரண்டு பேரையும் நேரடியாக கழுதை என விமர்சித்து அலுவலகத்திற்குள் கூட அடியெடுத்து வைக்க விடாமல் தடுத்தார்.
அரசியல்வாதிகளின் ஆணிவேரை ஆட்டிய சேஷன் இவர்களின் நியமனத்தை எதிர்த்து சேஷன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தை சுட்டிக்காட்டி சேஷன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போராடிய சேஷன், பின்னாளில் திமிர் பிடித்தவர் என்று அழைக்கப்பட்டார்.
சேஷனின் துணிச்சலான மற்றும் சீர்திருத்த முடிவுகளுக்காக தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ராமன் மகசேசே விருது பெற்றார். தேர்தல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அரசியலிலும் நுழைந்தார். 1997 குடியரசுத் தேர்தலில் கே.ஆர்.நாராயணனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1999-ல் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பாஜக தலைவர் எல்.கே.அத்வானியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சேஷன் நவம்பர் 10, 2019 அன்று சென்னையில் காலமானார்.
இதையும் படிங்க:தேர்தல் ஆணையர் தேர்வில் மின்னல் வேகம் ஏன்? - உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!