ஷில்லாங்:பிப்.27ஆம் தேதி அன்று, மேகாலயா சட்டப்பேரவைக்கு உள்பட்ட 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரதமர் மோடி வரும் 24ஆம் தேதி ஷில்லாங்கில் உள்ள துராவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே சங்க்மாவின் சொந்த தொகுதியான தெற்கு துராவில் உள்ள பிஏ சங்க்மா அரங்கத்திற்கு மேகாலயா பாஜக அனுமதி கோரியது. ஆனால், பிரதமர் மோடியின் தேர்தல் பேரணிக்கு பிஏ சங்க்மா அரங்கத்தில் அனுமதி கிடையாது என அம்மாநில விளையாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
இதனால் மேகாலயாவில் மோடியின் அலையை ஆளும் தேசிய மக்கள் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன என பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி சுவப்னில் டெம்பே கூறுகையில், "அனுமதி கோரப்பட்ட அரங்கத்தில் கட்டுமானப் பணிகள் சென்று கொண்டிருக்கிறது. கட்டுமானப் பணிகளுக்கான பொருட்களால் அரங்கம் முழுவதும் நிரம்பி உள்ளது. எனவே ஒரு தேர்தல் பேரணியை நடத்துவதற்கு பிஏ அரங்கம் உகந்தது அல்ல. இந்த அரங்கிற்கு பதிலாக அலோட்கிரே அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.