ஹைதராபாத்:குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி (பிற்பகல் 1.55 மணி), பாஜக 111 இடங்களில் வெற்றி பெற்று 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் 13 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
3 இடங்களில் வெற்றி அடைந்துள்ள ஆம் ஆத்மி, 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றும், 1 இடத்தில் முன்னிலை வகித்தும் வருகின்றன. கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும், பாரதிய டிரைபல் கட்சி (BTP) 2 இடங்களும், என்சிபிக்கு ஒரு இடமும், சுயேச்சைகளுக்கு மூன்று இடங்களும் கிடைத்தன.
இதன் மூலம் 49.1 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, தற்போது 53 சதவீத வாக்குகளாக தங்களை உயர்த்தியுள்ளது. ஆனால் காங்கிரஸின் வாக்கு வங்கி 41.4 சதவீதத்திலிருந்து 26.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் காங்கிரஸின் வாக்கு விகிதம் கிட்டத்தட்ட 14.5 சதவீதம் குறைந்துள்ளது.