டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீட்டில் நடைபெற்ற மதிய விருந்தில் கலந்து கொண்ட அரியானாவைச் சேர்ந்த பெண்கள், ராகுல் காந்தியை விரைந்து திருமணம் செய்து கொள்ளச் சொல்லுமாறு சோனியாவிடம் கேட்டுக் கொண்ட சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது.
கடந்த ஜூலை 8ஆம் தேதி டெல்லியில் இருந்து இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லாவுக்கு அரியானா மாநிலம் வழியாக சென்று கொண்டு இருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள சோனிபட் மாவட்டம் மதினா கிராமத்திற்கு திடீரென சென்றார். அங்கு விவசாயிகள் நடவு பணிக்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த நிலையில் அவர்களுடன் கலந்துரையாடி தானும் வயல் வெளியில் இறங்கி நடவு பணியில் ஈடுபட்டார்.
மேலும், டிராக்டர் ஒட்டியும் ராகுல் காந்தி மகிழ்ந்தார். விவசாயிகளிடம் கலந்துரையாடிய போது, அனைவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக உறுதி அளித்து உள்ளார். இந்நிலையில், கிராமத்தை பெண்கள் அனைவரையும் தனது தாயார் சோனியா காந்தி வீட்டிற்கு ராகுல் காந்தி டெல்லி அழைத்துச் சென்றார்.
டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் ஜன்பாத் இல்லத்திற்கு கிராமத்து பெண்களை அழைத்து சென்ற ராகுல் காந்தி, அனைவருக்கும் மதிய விருந்து கொடுத்தார். தொடர்ந்து அனைவருடனும் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துரையாடினர். அப்போது ஒரு பெண்மணி, சோனியா காந்தியை நோக்கி, விரைவாக ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ள சொல்லுங்கள் என்று கூறினார்.