லே:லடாக்கின் ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பியாங் என்னும் கிராமத்தில் அரிய வகை பனிச்சிறுத்தை தென்பட்டுள்ளது. இந்த சிறுத்தையை லடாக்கின் ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆல்டர்நேட்டிவ்ஸ் தலைவர் ராகுல் கிருஷ்ணா படம் பிடித்துள்ளார். இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்துக்கு ராகுல் கிருஷ்ணா அளித்த தகவலில், லடாக்கின் தலைநகர் லேயில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள பியாங் என்னும் கிராமத்தில் அழிந்துவரும் பனிச்சிறுத்தையை அதன் இரையுடன் கண்டேன்.
இந்த அரிய காட்சியை எனது கேமரா மூலம் பதிவு செய்தேன். இந்த காட்டிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இவை தென்படுவது அரிதினும் அரிதான ஒன்று. இமயமலைகளில் மட்டுமே வசிக்கும் இந்த பனிச்சிறுத்தைகள், நீல ஆடுகளை வேட்டையாடுவதை வழக்கமாக வைத்துள்ளன. இதனடிப்படையிலேயே, வேட்டையாடி உண்டு கொண்டிருக்கும்போது, எனது கண்ணில் பட்டது எனத் தெரிவித்தார்.