ஹைதராபாத்:கிரெடிட் கார்டுகளில் கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மூலம் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். கிரெடிட் கார்டுகளுக்கு 5 முதல் 10% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சூழலில், அவற்றைப்பயன்படுத்தும்போது சில கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. அதில் ஒரு சில குறிப்புகளை பார்க்கலாம்.
உங்கள் கார்டை அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் கார்டில் உள்ள கடன் வரம்பு என்ன? நீங்கள் அதை எவ்வளவு பயன்படுத்தியுள்ளீர்கள்? பில் செலுத்த வேண்டியதொகை எவ்வளவு? இவை அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். புதியதாக பொருட்கள் வாங்குவதற்கு முன் ரிவார்ட் புள்ளிகள் மற்றும் பில்லிங் நிலுவைத் தேதிகளைப் பார்க்கவும். அப்போதுதான், எந்த அட்டையைப் பயன்படுத்த வேண்டும், எவ்வளவு தொகையைச் செலவிட வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
முதல் கட்டமாக: வழக்கமாக, கிரெடிட் கார்டில் பொருள் வாங்கிய பிறகு, பணத்தைத் திருப்பிச் செலுத்த 30 முதல் 40 நாட்கள் வரை, உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பில்லிங் தேதியின் தொடக்கத்தில் கார்டைப் பயன்படுத்தினால் மட்டுமே இந்த நன்மையைப் பெற முடியும். எடுத்துக்காட்டாக, உங்கள் பில்லிங் தேதி 8ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது என்று வைத்துக் கொள்வோம், அப்படியெனில் நீங்கள் 9 மற்றும் 15ஆம் தேதிக்கு இடையில் வாங்கினால் உங்களுக்கு டைம் அட்வாண்டேஜ் கிடைக்கும்.
தள்ளுபடிகளைத் தவறவிடாதீர்கள்: சில பிராண்டுகள் கிரெடிட் கார்டு நிறுவனங்களுடன் இணைந்துள்ளன, இவை வழக்கமான தள்ளுபடிகளைத் தாண்டி சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குகின்றன. இது பெரும்பாலும் திருவிழாக்காலங்களில் கிடைக்கும். இரண்டு அல்லது மூன்று கார்டுகளை வைத்திருப்பவர்கள், எந்த அட்டையில் அதிக தள்ளுபடி கிடைக்கும் என்பதைத்தெரிந்து கொள்ள வேண்டும்.