டெல்லி: பள்ளி மாணவர்களின் தேர்வு, மன அழுத்தம் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்களைப் பற்றி, பிரதமர் மோடி உடன் கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்காக ‘பரிக்ஷா பே சர்ச்சா’ (Pariksha pe Charcha) என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
இந்நிகழ்ச்சி மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையால் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் 6ஆம் ஆண்டாக நடைபெறும் Pariksha pe Charcha நிகழ்ச்சியில், மாநில பள்ளிகள், சிபிஎஸ்சி, கேந்திரிய வித்யாலாயா, நவோதயா வித்யாலயா மற்றும் பிற பள்ளிகளைச் சேர்ந்த 31.24 லட்சம் மாணவர்கள், 5.60 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 1.95 லட்சம் பெற்றோர் உள்பட மொத்தம் 38.80 லட்சம் பேர் பங்கேற்றனர்.