ஹைதராபாத்: வண்டி எண் 12727 கொண்ட கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று (பிப்.15) தெலங்கானாவின் மெட்சல் மாவட்டத்தில் உள்ள கட்கேஷர் அருகில் உள்ள அங்குஷாபூரில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த விபத்து நிகழ்ந்த உடன் பயணிகள் பயத்துடனும் பதட்டத்துடனும் இருந்தனர். இதனையடுத்து ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்த சம்பவத்தால் காஜியாபெத் முதல் செகந்திராபாத் வரையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதேநேரம், தடம் புரண்ட பெட்டிகள் சரிசெய்யப்பட்டு, அதே ரயில் மூலம் அதன் இலக்கை அடையும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தால், செகந்திராபாத் நோக்கி வந்த ரயில்கள் பிபிநகர், புவனகிரி மற்றும் கட்கேஷர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.