சண்டிகர்:முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவின் சகோதரி சுமன் தூர் இன்று (ஜன.) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தனது தந்தை பல்வாந்த் சிந்து மறைவிற்கு பிறகு தாயார் நிர்மல் பல்வாந்தையும், மூத்தச் சகோதரியையும் சித்து வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார் எனவும் பொய் சொல்வதற்கு நான் ஒன்றும் சித்து இல்லை என்றும் சித்து மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், அவர், "தனது தந்தையும், தாயாரும் அவர் (சித்து) இரண்டு வயதாக இருக்கும்போதே பிரிந்துவிட்டனர் என்று சித்து கூறியது பொய். எனது தாயார் டெல்லி ரயில் நிலையத்தில் ஆதரவற்று இறந்துவிட்டார்.
இதுதொடர்பாக, சித்துவை சந்திக்க அமெரிக்கவில் இருந்து அமிர்தசரஸில் அவரது வீட்டிற்கு வந்தேன். ஆனால், அவர் வீட்டின் கதவைக் கூடத் திறக்கவில்லை" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
எதிர்க்கட்சிகள் தாக்குதல்
நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் நவ்ஜோத் சிங் சித்து போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் சிரோமணி அகாலிதளம் வேட்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதலின் மருமகனுமான பிக்ரம் சிங் மஜிதியா சித்துவின் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.
இது குறித்து அவர், "சகோதரி சுமன் தூரிடமும், அவரின் (சித்து) தாயாரிடமும் சித்து கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். தாயார் குறித்து கூட சிந்திக்காத சித்து, எப்படி பஞ்சாப் குறித்து சிந்திப்பார்" எனச் சாடியுள்ளார்.
மேலும், அகாலிதள தலைமை செய்திதொடர்பாளர் கூறுகையில், இதுதான் சித்துவின் பஞ்சாப் மாடலா என்றும் தன் மீது எந்த கறையும் இல்லை எனக்கூறும் சித்து, இதை என்னவென்று சொல்வார் என்றும் கேள்வியெழுப்பிள்ளார்.
சகோதரியை சந்திக்கும் தலைவர்கள்
தற்போது, மஜிதியாவை அடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆகியோர் சித்துவின் சகோதரி சுமன் தூரை விரைவில் சந்திக்க உள்ளனர்.
இதற்கிடையில், நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவியும், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான நவ்ஜோத் கௌர் சிங் இந்த விவகாரம் குறித்து வாய் திறந்துள்ளார். "சித்துவின் சகோதரி எனக் கூறும் அவர் தனக்கு யார் என்றே தெரியாது. சித்துவுடைய தந்தையின் முதல் மனைவிக்கு இரு மகள்கள் தான் உள்ளனர். இவர் யார் என்றே தெரியாது" என குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மூத்த கிரிக்கெட் வீரர் பல்வாந்த் சிங், நவ்ஜோத் சிங் தந்தை ஆவார். ஒரு பழைய நேர்காணலில், தந்தையுடன் தான் மிகவும் நெருக்கமாக இருந்தேன் என்றும் தனது பெற்றோர் தனது இரண்டு வயதிலேயே பிரிந்துவிட்டனர் என்றும் சித்து கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க: Reservation in Promotion: பதவி உயர்வில் புதிய அளவுக்கோலை அமைக்க முடியாது - உச்ச நீதிமன்றம்