புதுடெல்லி: மழை விட்டபிறகும் இன்னும் தூவானம் விடவில்லை என்பது போல, கர்நாடக சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 135 இடங்களில் வெற்றி பெற்று, அறுதிப் பெரும்பான்மை பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்து உள்ள நிலையிலும், இன்னும் அங்கே, முதலமைச்சர் யார் என்பது இழுபறியாகவே நீடித்து வந்தது.
புதிய முதலமைச்சர் யார் என்ற தேர்வு, சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மீண்டும் சித்தராமையாவும், துணை முதலமைச்சராக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சர் தேர்வு விவகாரத்தை கையாண்டு வருகிறார். புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா, மே 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, '' கர்நாடகத்தில் முதலமைச்சராக சித்த ராமையா காங்கிரஸ் கட்சியால் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், கர்நாடகத்தின் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் செயல்படுவார். அதேபோல், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் நீடிப்பார். கட்சியில் தகுதிவாய்ந்த தலைவர்கள் பலரும் இருப்பதால், முதலமைச்சரை தேர்வு செய்வதில், சிறிது தாமதம் ஏற்பட்டது. ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே முதலமைச்சர் தேர்வு நடைபெற்றுள்ளது’’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.