தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு? பாலாபிஷேகம், பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்! - சித்தராமையா கர்நாடக முதலமைச்சராக தேர்வு

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Karnataka
Karnataka

By

Published : May 17, 2023, 8:05 PM IST

பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக நாளை (மே. 18) சித்தராமையா பதவியேற்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த மே. 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற. தொடர்ந்து, மே.13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 135 இடங்களுடன் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

இருப்பினும் முதலமைச்சரை தேர்வு செய்வது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக இருந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாள் பெங்களூருவில் எம்.எல்.ஏ.க்கள் கூடி முதலமைச்சரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டது. இருப்பினும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்படாத நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது.

கர்நாடக முதலமைச்சர் ரேசில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் இடையே பலத்த போட்டி நிலவியது. தலைநகர் டெல்லி சென்று இருவரும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களை சந்தித்து, மாநிலத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்காக செய்த தொண்டுகளை கூறி முதலமைச்சர் பதவி தனக்கு ஒதுக்கும்படி இருவரும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற டி.கே. சிவகுமார் கடுமையாக உழைத்த போதும், கட்சி மேலிடம் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறது.

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா நாளை (மே. 18) பதவியேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சித்தராமையா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட தகவல் வெளியான நிலையில், அவரது ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். பெங்களூரு மற்றும் அவரது சொந்த ஊரான சித்தராமனஹுண்டியில் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மேலும் சித்தராமையாவின் போஸ்டர் மற்றும் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும், மேள தாளங்கள் முழங்க வீதிகளில் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். அதேநேரம், கர்நாடக முதலமைச்சர் தேர்வு குறித்து டெல்லி கட்சி மேலிடம் தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் மறுபுறம் செய்திகள் பரவி வருகின்றன.

முதல் இரண்டு அண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக இருப்பார் என்றும் அடுத்த மூன்று ஆண்டுகள் டி.கே. சிவகுமாரை முதலமைச்சராக்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2028 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை டி.கே. சிவகுமார் தலைமையில் எதிர்கொள்ள இத்தகைய திட்டத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க :The Kerala Story : மதமாற்றத்தால் பாதித்த 300 பெண்களுக்கு உதவி... தி கேரளா ஸ்டோரி படக்குழு திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details