டெல்லி:தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
இதனை மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில், ஆம் ஆத்மி, திருணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசிய மாநாடு, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
பிரசாந்த் கிஷோர்-மம்தா பானர்ஜி-சரத் பவார் அரசியல் சூழல்
மேலும், அரசியல் முக்கியப் பிரமுகர்களான ஃபரூக் அப்துல்லா, யஸ்வந்த் சின்கா, பவன் வர்மா, சஞ்சய் சிங், டி. ராஜா, ஏ.பி. சிங், ஜாவேத் அக்தர், கே.டி.எஸ். துளசி, கரன் தப்பார் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்க இருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் வருகின்ற மக்களவைக் கூட்டத்தொடர், தற்போதைய நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும் என நவாப் மாலிக் தெரிவித்தார்.
கிஷோர்-பவார்
அரசியல் யுக்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நேற்று (ஜூன் 21) சரத் பவாரை டெல்லியில் சந்தித்தது கவனிக்கத்தக்க ஒன்றாகும். இது இவர்களது இரண்டாவது சந்திப்பு என்பது கூடுதல் தகவல். முன்னதாக பவாரை மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் இந்த மாத தொடக்கத்தில் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர்-சரத் பவார் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக நவாப் மாலிக் கூறியுள்ளார்.