மும்பை (மகாராஷ்டிரா): சொகுசுக் கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கடி பணக்காரர்களுக்காகப் பல்வேறு வகையான கடல் பயண சுற்றுலாக்களை நடத்துவது உண்டு. சில தனியார் அமைப்புகளும், சொகுசுக் கப்பல்களை வாடகைக்கு பெற்று கடல் சுற்றுலாக்களை நடத்துவதுண்டு.
மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலாவாக கார்டிலியா என்ற சொகுசுக் கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 6 பேர் இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தனர். இணையதளம் வாயிலாக சுற்றுலாப் பயண நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அந்த சொகுசுக் கப்பலில் சுமார் 1,000 பயணிகள் பயணம் செய்ய முடியும்.
இரண்டு இரவுகள் பயணம்
மும்பையில் இருந்து அக்டோபர் 2ஆம் தேதி புறப்பட்டு அரபிக் கடலில் இரண்டு இரவுகள் கழித்துவிட்டு கோவா வழியாக மீண்டும் அக்டோபர் 4ஆம் தேதி காலை மும்பை திரும்பும் வகையில், அந்தச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடு முழுவதிலும் இருந்து 800க்கும் மேற்பட்டவர்கள் அந்தக் கப்பலில் சுற்றுலாச் செல்ல முன்பதிவு செய்திருந்தனர்.
திட்டமிட்டபடி நேற்று (அக். 2) மதியம் அந்த சொகுசுக் கப்பல் மும்பை துறைமுகத்தில் இருந்து சுற்றுலாப் பயணத்தை தொடங்கியது. அதில், கோடீஸ்வரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மாடலிங் உலகைச் சேர்ந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இடம் பெற்றிருந்தனர்.
நடன நிகழ்வில் போதை விருந்து
இச்சூழலில் சொகுசுக் கப்பலில் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை கையும், களவுமாகப் பிடிக்க மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இயக்குநர் சமீர் முடிவு செய்தார். இதற்காக அவர் தனிப்படையை அமைத்தார்.
போதைப் பொருள் தடுப்புப்பிரிவைச் சேர்ந்த 20 அலுவலர்கள் சுற்றுலாப் பயணிகள் போல மாறுவேடத்தில், அந்தக் கப்பலில் சென்றனர். அவர்கள் கப்பலில் உள்ள பயணிகளை கண்காணித்தபடி இருந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு கப்பலில் நடன விருந்து தொடங்கியது.
பயணிகளும் உற்சாகமாக நடனமாடினார்கள். அந்த சமயத்தில் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை மாறுவேடத்தில் இருந்த காவல் துறையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அலெர்ட்டான போதைப் பொருள் தடுப்புப்பிரிவினர் அதை யார் விநியோகம் செய்வது என்பதை மாறுவேடத்தில் இருந்தபடியே ஆய்வு செய்தனர்.
கையும் களவுமாகப் பிடிபட்ட 8 பேர்
சுமார் ஏழு மணி நேரம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர், அந்த சொகுசுக் கப்பல் முழுவதையும் ஒரு இடம் கூட விடாமல் சோதித்தனர். அப்போது எட்டு இளைஞர்கள் போதைப் பொருட்களை தொழிலதிபர்களின் மகன்கள், மகள்களுக்கு கொடுப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த எட்டு பேரையும் போதைப் பொருள் தடுப்புப்பிரிவினர் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து பண்டல் பண்டலாக கொகைன், கஞ்சா உள்பட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
நடன நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென போதைப் பொருள் தடுப்புப்பிரிவினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதை அறிந்ததும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆரியன் கான் உள்பட மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆனால், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் குற்றவாளிகளை மட்டும் குறிவைத்து பிடித்து தனிமைப்படுத்தினார்கள். போதைப் பொருளைப் பயன்படுத்தியவர்கள், விநியோகம் செய்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் இருப்பதும் தெரியவந்தது.
பரிசோதனைக்குப் பின் கைது
அவரிடமும் போதைப் பொருள் தடுப்புப்பிரிவினர் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர், ஆரியன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா, நுபுர் சரிகா, இஸ்மீத் சிங், மோஹக் ஜஸ்வால், விக்ராந்த் சோக்கர், கோமித் சோப்ரா என எட்டு பேரை கப்பலில் இருந்து மும்பைக்கு அழைத்துவந்தனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் பின்னர், ஆரியன் கான், ஆர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இப்பரிசோதனைக்குப் பிறகு, இம்மூவரையும் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து, விடுமுறை தின நீதி மன்றத்தில் இன்று (அக்டோபர் 3) ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் வழக்கறிஞர் அத்வைத் சேத்னா, குற்றம் சாட்டப்பட்டவர்களை இரண்டு நாள்கள் காவலில் வைக்க கோரிக்கைவிடுத்துள்ளார். மேலும் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், போதைப்பொருள் சப்ளையரை கைது செய்ய தனிக்கைகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து ஆரியன் கானின் வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே, ஆரியனிடம் போதை பொருள் பயன்படுத்தியதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை எனக் கூறினார். பின்னர் அக்டோபர் நான்கு, ஆர்யனுக்கு பிணை கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாக கூறினார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஷாருக்கானின் மகன் இதனைத் தொடர்ந்து, ஆரியன் மீது பதிவு செய்யப்பட்ட பிரிவுகள் அனைத்தும், பிணை வழங்கக்கூடிய பிரிவுகளாக இருந்தாலும், ஒரு நாள் மட்டும் அவரை காவலில் வைத்து, வழக்கமான நீதிமன்றத்தில் முன் பிணை கோர முடியும் என அவர் கூறினார்.
இது வெறும் கண்துடைப்பு - காங்கிரஸ்
முன்னதாக, மும்பையில் நடைபெற்றுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் இந்த அதிரடி சோதனை என்பது குஜராத்தில் பிடிபட்ட ஹெராயின் பிரச்னையை மூடிமறைக்கும் கண்துடைப்பு நடவடிக்கைதான் என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
வருவாய்துறை நுண்ணறிவு இயக்குநரக (DRI) அலுவலர்களால் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குஜராத் முந்த்ரா (Mundra) துறைமுகத்தில் கடந்த மாதம் ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,988.21 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை - ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!