மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தேவ்பிரயாக், ராம்நகர், ராம்கர், கவுலாப்பர் மற்றும் ருத்ராபூர் உள்ளிட்ட பகுதிகளை உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா வான்வழியாக இன்று (அக்.10) ஆய்வு செய்தார்.
உத்தரகாண்ட் ஆளுநர் குர்மீத் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, உத்தரகாண்ட் பேரிடர் மேலாண்மை அமைச்சர் திரு டி எஸ் ராவத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அனில் பலுனி உள்ளிட்டோர் உடனிருந்தனர். வான்வழி ஆய்வுக்குப் பிறகு, அதிகாரிகளுடன் அமித் ஷா உரையாடினார்.
அப்போது அவர், அக்டோபர் 16-ம் தேதி 24 மணி நேரத்திற்கு முன்னதாக மத்திய அரசு எச்சரிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, மாநில பேரிடர் நிவாரணப் படை, தேசிய பேரிடர் நிவாரணப் படை, இந்திய-திபெத் எல்லையோரப் படை, ராணுவம், விமானப்படைக்கு மாநில அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கைகள் அனுப்பியதால் பெரும் சேதத்தைத் தடுக்க முடிந்தது எனக் கூறினார்.
அனைவருக்கும் தொலைபேசி வாயிலாக முன்கூட்டியே எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன. இதனால் தேவையற்ற இயக்கங்கள் தவிர்க்கப்பட்டு மழை துவங்கும் முன் சார் தாம் யாத்ரீகர்கள் நிறுத்தப்பட்டனர். இதன் காரணமாக சார் தாம் யாத்ரீகர்கள் யாருக்கும் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.