கேசவகிரி:தெலங்கானா மாநிலம் கேசவகிரி மாவட்டத்தில் பேய்களை விரட்டுவதாக கூறி திருமணமான இளம்பெண் ஒருவரை போலி சாமியார் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் கால தாமதமாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்ததன் பேரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குற்றவாளியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிய நிலையில் அவர் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தப்பிச்சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 21 வயதான இளம்பெண் ஒருவர் இளைஞர் ஒருவரை காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
திருமணமான சில நாட்களிலேயே அந்த பெண்ணுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த பெண் தனது கணவரிடம் கூறிய நிலையில் அவர் தனது மனைவி தீய சக்திகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என சந்தேகம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து தனது தாய் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் முதலில் பர்கத்புராவில் உள்ள சாமியார் ஒருவரிடம் தனது மனைவியை அழைத்துச் சென்று பூஜை வழிபாடு மேற்கொண்டுள்ளார்.
ஆனால் அதில் எவ்வித மாற்றமும் இல்லை எனக்கூறப்படுகிறது. இதனால், இரண்டாவது முறையாக பழைய பஸ்தி பந்தலகுடா ரஹ்மத்நகரில் உள்ள தந்திரிக் மசார் கான் (30) என்பவரிடம் கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் பேய் விரட்டுவதற்காக அந்த இளம்பெண்ணை அவரது கணவர் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணின் மீது ஐந்து பேய்கள் இருப்பதாகவும் அதை விரட்டச் சிறப்புப் பூஜை வழிபாடு மேற்கொள்ள வேண்டும் எனவும் தந்திரிக் மசார் கான் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணின் வீட்டிற்கு வருகை தந்த போலி சாமியார் மசார் கான், வீட்டை ஆய்வு செய்து விட்டுப் பின்னர் தனது வீட்டிற்கு அந்த இளம் பெண்ணை அழைத்து வரும் படி அவரின் கணவரிடம் கூறியுள்ளார்.