வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்து சித்ரவதை செய்த காரணங்களுக்காக உத்தரப் பிரதேசம் மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்த குஷாபே அலி என்ற நபர் கைதுசெய்யப்பட்டார். இவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மோஹ்த் அஸ்லாம், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375இன்படி, 15 வயதுக்கு மேல் உள்ள பெண்ணுடன் (சிறுமி) உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வு ஆகாது எனத் தெரிவித்தார்.
1860ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375இல் - பெண் உடன்படாமல் (non-consensual) எந்த வகையிலான உடலுறவு வைத்துக்கொள்வதும் பாலியல் வன்புணர்வு ஆகும். ஆனால் 15 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ளுதல் பாலியல் வன்புணர்வு ஆகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறகு 2013ஆம் ஆண்டு குற்றவியல் திருத்தச் சட்டத்தின்படி உறவுக்கு ஒப்புக்கொள்ளுதலுக்கான வயது வரம்பு 15 லிருந்து 18ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும் 15 வயதுடைய அல்லது அதற்கு மேல் உள்ள பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வில் சேராது என்ற சட்டம் திருத்தப்படாததால் கணவன் மனைவியுடன் கட்டாய உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வில் சேரவில்லை.