கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த அகமதுகான் என்னும் தொழிலதிபர்சீன கேமிங் செயலி மூலம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அந்த வகையில் நேற்று (செப் 10), அகமதுகானுக்கு தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் ரூ.17.5 கோடி ரூபாய் ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் மூத்த அமைச்சரும் கொல்கத்தா மேயருமான ஃபிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில், “அமலாக்கத்துறை சோதனைக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சம்பந்தப்பட்ட தொழிலதிபருக்கும் டிஎம்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இருப்பினும் பணமோசடி வழக்குகள் பாஜக அல்லாத கட்சி உறுப்பினர், தொழிலதிபர்கள் மீது மட்டுமே போடப்படுகிறது. 17 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், அந்தப் பணத்தின் ஆதாரம் குறித்து நிச்சயமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால், 7,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி எங்கு சென்றார்கள்..? அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன் அவர்களின் தவறு ஏன் வெளிச்சத்திற்கு வரவில்லை..?” என்று தெரிவித்தார்.