தெலங்கானா:தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ரூபி லாட்ஜில் நேற்று(செப்-12) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. லாட்ஜில் தங்கியிருந்த ஒரு பெண் உட்பட 7 சுற்றுலாப் பயணிகள் தீ விபத்தால் ஏற்பட்ட புகையால் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செகந்திரபாத் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அருகில் ரூபி சொகுசு பிரைட் என்ற ஐந்து மாடி கட்டிடம் உள்ளது. அக்கட்டிடத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் தரை தளத்தில் இயங்கி வருகிறது. மீதமுள்ள நான்கு மாடிகளில் தங்கும் வசதி கொண்ட ஒரு ஹோட்டல் உள்ளது . இந்நிலையில் நேற்று இரவு 9.40 மணியளவில் தரை தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ அதிகமாக பரவியதால் ஷோரூமில் இருந்த பைக்குகளின் பேட்டரிகள் வெப்பத்தால் வெடித்து சிதறின. இதனால், தீ மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக எலக்ட்ரிக் பைக்குகள் வெடித்து சிதறின.