டெல்லி:பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து மோடி அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனைகள் குறித்து பாஜக தலைவர்கள் பலரும் பரப்புரை செய்து வருகின்றனர். பல மாநிலங்களில் பாஜகவினர் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆங்கில நாளிதழ் ஒன்றில், மோடி அரசின் சாதனைகள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், மோடி அரசின் பல சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார். அதேபோல், எதிர்க்கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த கட்டுரையின் சாராம்சங்களை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கட்டுரையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள விஷயங்களுக்குப் பதில் அளித்துள்ளார்.
அதில், "நிதியமைச்சர் மோடி அரசின் சாதனைகள் குறித்து கட்டுரை எழுதியுள்ளார். அதில், எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக, நீதிமன்றத்திற்குச் சென்று தோற்றதற்கான ஐந்து எடுத்துக்காட்டுகளை நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் மூன்று உதாரணங்களை தவறாக கூறியுள்ளார். ஒன்று, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கு முன்பாகவே, முத்தலாக் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. அதேபோல் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவில்லை. ஜிஎஸ்டி தொடர்பாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.