பெங்களூரு (கர்நாடகா):திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டம், நாளை (ஜூலை 17) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 18) ஆகிய தேதிகளில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜ்வாலார் ஆகியோர் நேற்று (ஜூலை 15) ஆய்வு செய்தனர்.
2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக அணி திரளும் வகையில், நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர்.
இதன் ஒருபகுதியாக, பிகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகள் கலந்து கொண்டன. பாட்னா கூட்டம், பிகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற நிலையில், பெங்களூரு கூட்டம் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற உள்ளது.
பாட்னா கூட்டத்தில் 17 எதிர்கட்சிகள் பங்கேற்று இருந்த நிலையில், பெங்களூரு கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் அணி), கேரளா காங்கிரஸ் (எம்), கேரளா காங்கிரஸ் (ஜே), ஆர்எஸ்பி, பார்வார்ட் பிளாக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, அகாலி தளம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 24 எதிர்கட்சிகள் பங்கேற்க உள்ளன.
இந்த கூட்டத்தில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் முன்னதாக இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அது தற்போது பெங்களூருவிற்கு மாற்றப்பட்டு உள்ளது.