டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி 108ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக இன்று (ஜனவரி 3) தொடங்கி வைத்தார். இந்த மாநாடு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. மகளிருக்கு அதிகாரம் அளித்தலுடன் நீடித்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். இந்திய அறிவியல் மாநாட்டின் தொழில்நுட்ப அமர்வுகள் 14 பிரிவுகளாக நடைபெறுகிறது.
இதில் மகாராஷ்டிரா ஆளுநரும், மகாராஷ்டிரா பொது பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பகத் சிங் கோஷ்யாரி, மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழக நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஆலோசனை குழுவின் தலைவருமான நிதின் கட்கரி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவந்திர பட்னாவிஸ், ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் சுபாஷ் ஆர் சௌத்ரி, கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் மாநாடு சங்கத் தலைவர் விஜய் லஷ்மி சக்சேனா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.