புதுச்சேரியில் யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்து, அதனை வீசிப் பார்த்து சோதனை செய்த சிறுவர்களின் சிசிடிவி வீடியோ புதுச்சேரி:சாந்திநகர் பிரிவு 2ஆவது குறுக்கு தெருவில் ஜன.8ஆம் தேதி இரவு 10.30 மணியளவில், 2 முறை வெடி சத்தம் கேட்டுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்து இருந்துள்ளது. இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், உருளையன்பேட்டை காவல் ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வாகனத்தின் அருகே கூழாங்கற்கள் இருந்துள்ளது. இது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாயுடன் சோதனை நடத்தப்பட்டது.
ஆனால், அந்த இடத்தில் கூழாற்கற்கள் மற்றும் பட்டாசு வெடிமருந்தை தவிர வேறு எதுவும் இல்லாததால், வெடிக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டாக இருக்கும் என்ற சந்தேகத்தில், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்த கேமராக்களை சோதனையிட்டதில், 6 சிறுவர்கள் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் வேகமாக ஓடுவதும், சிறிது தூரம் சென்ற பிறகு நடந்து சென்றதும் பதிவாகி இருந்தது.
இதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையினர், 4 சிறுவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
வீட்டில் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் இருந்தபோது, அதை வேறு விதத்தில் எப்படி பயன்படுத்தலாம் என யூடியூப்பில் பார்த்துள்ளனர். யூடியூப் வீடியோவின் அடிப்படையில் 2 வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். இதில் ஒரு வெடிகுண்டை அவர்கள் வீசி பார்த்தபோது சத்தம் வராமல் வெளிச்சம் மட்டும் வந்துள்ளது.
ஆனால் மற்றோரு வெடிகுண்டை வீசியபோதுதான், சத்தத்துடன் வெடித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே சிறுவர்கள் வெடிகுண்டு வீசிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:Chennai Theft: பட்டப்பகலில் வீட்டில் கொள்ளையடித்த சினிமா மேக்கப் ஆர்டிஸ்ட் கைது