டெல்லி: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தன் மீதான முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கினை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்றம் வழக்கு விசாரணை செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உச்ச நீதிமன்றத்தில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள முரசொலி கட்டடம் பஞ்சமி நிலம் என தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியில் இருக்கும்போது வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கினை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்து வருகிறது.
இதையும் படிங்க:அரசு நிலத்தை அபகரித்த வழக்கு; அரசியல் பிரமுகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
இந்த நிலையில், முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யவும், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்தும், சிறப்பு நீதிமன்ற வழக்கை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டது. எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பி.கே.மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் டேவ், இந்த வழக்கு அரசியல் நோக்கங்களுக்காக போடப்பட்டுள்ளது எனவும், நிலத்தின் உரிமை தொடர்பான பேச்சை அவதூறு எனக் கூற முடியாது எனவும், சில பிரச்சினைகளில் கருத்துகள் தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து முரசொலி அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியும், சிறப்பு நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆறு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:“விளம்பரத்திற்காக வழக்கு போடுகிறார்கள்” - அமைச்சர் உதயநிதியின் சனாதனம் பேச்சு தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்!