டெல்லி: தமிழ்நாட்டில் இளம்பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் காதல் வயப்பட்டார். இந்தக் காதல் நாளடைவில் அதீத நெருக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அப்பெண்ணைிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி அவருடன் உடல் ரீதியிலான தொடர்பை இளைஞர் ஏற்படுத்திகொண்டார்.
அதன்பின்னர் அப்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்த இளைஞர், உன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை, நாம் பிரிந்து விடலாம் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண், இளைஞரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் அத்தனை முயற்சியும் பலனற்று போனது.
இறுதியில் அப்பெண் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், காவலர்கள் இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதற்கிடையில் மனம் மாறிய அப்பெண், இந்தத் உத்தரவுக்கு எதிராக, தனது காதலனுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். இருப்பினும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தண்டனையை உறுதிப்படுத்தினார். தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த மனு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “வழக்கு தொடர்பான மனு நீதிமன்றத்தில் உள்ளது, ஆகையால் இளைஞர் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுடாம்” என அறிவுறுத்தி நோட்டீஸ் அளித்தனர்.