டெல்லி: இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயல் கடந்த திங்கட்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. மத்திய கனரக தொழில்துறை செயலாளராக இருந்த அருண் கோயல் கடந்த 18ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார்.
அவர் ஓய்வு பெற்ற மறுநாளே இந்திய தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் ஆணையருக்கான பதவி கடந்த மே 15ஆம் தேதி முதல் காலியாக இருந்த நிலையில், அருண் கோயல் ஓய்வு பெற்ற மறுநாளே நியமனம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனத்தில் ஏன் மின்னல் வேகம்? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. எந்த அடிப்படையில் தேர்தல் ஆணையர் தேர்வு நடைபெற்றது என வினவிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அருண் கோயலின் திறமை குறித்து கேள்வி எழுப்பவில்லை என்றனர். தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யக் கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து அருண் கோயல் நியமனத்தில் முறைகேடுகள் இல்லை என மத்திய அரசு தரப்பில் ஆவணங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் மனுவை மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த மே மாதம் முதலே இந்திய தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ள நிலையில், 24 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் அருண் கோயல் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்ததற்கான காரணம் என்ன என வினவினர்.