டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மூத்த பத்திரிகையாளர்கள் என் ராம், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மற்றும் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 3) நடந்தது.
அப்போது, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிபிசி ஆவணப்படம் தடை செய்தது தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் மாதம் விசாரணைக்கு பட்டியலிட்டனர். குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அப்போது முதலமைச்சராக பிரதமர் மோடி இருந்தார். இந்த கலவரத்துக்கும் மோடிக்குமான பங்கு குறித்து பிபிசி டூ செய்தி நிறுவனம் ஆவணப்படம் உருவாக்கி ஜனவரி 17ஆம் தேதி வெளியிட்டது. இந்த ஆவணப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பிரதமர் மோடிக்கு எதிரான தகவல்களை திட்டமிட்டு பகிர்ந்துள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது.