டெல்லி: மகாராஷ்டிராவில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவி வகித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து சிவசேனா கட்சி பிளவுபட்டு ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பிறகு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி, பாஜகவுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிசும் பொறுப்பேற்றனர். இதைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரே மற்றும் ஷிண்டே தரப்பினர் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரிய நிலையில், ஷிண்டே தரப்புக்கு சிவசேனா பெயர், சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஒருங்கிணைந்த சிவசேனாவுக்கு எதிராக செயல்பட்டதாக ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உத்தவ் தாக்கரே அணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்கள் மீது உடனடியாக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டது. இந்த வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், தகுதி நீக்க விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.