டெல்லி:அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை பதவி நீக்கம் செய்ய கோரிய மனு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இன்று (ஜன. 05) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடை இல்லை என்கின்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இசைந்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர தடையில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்திருந்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ள நபர் அமைச்சராகத் தொடர தடையில்லை. ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்டால், பதவி நீக்கம் செய்யப்படுவார் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.