டெல்லி: சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கு, நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி எஸ்.வி.என் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (நவ.29) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்தியா போன்ற பெரிய நாட்டில் பிரச்னைகள் இருக்கும், ஆனால் தேவையான இடங்களில் நடவடிக்கை எடுக்க போதுமான நிர்வாக இயந்திரம் நம்மிடம் உள்ளதா? என்பதுதான் கேள்வி என்று கூறினர். மேலும், நீதிமன்றங்கள் தனிப்பட்ட வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினால், முக்கியமான வழக்குகளைச் சமாளிக்க முடியாது என்று கூறிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நாடு முழுவதும் தனிப்பட்ட வழக்குகளை விசாரிப்பது சாத்தியமற்றது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா, "தனிப்பட்ட அம்சங்களை நாங்கள் கையாள முடியாது. வழக்கறிஞர் விஷ்ணுசங்கர் ஜெயின், உதயநிதி ஸ்டாலின் மீது அவமதிப்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த அவமதிப்பு மனு இங்கே பொய்யாகாது. உயர் நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள்" என்று அறிவுறுத்தி, சனாதன தர்மம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவமதிப்பு மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று மறுப்பு தெரிவித்தனர்.