டெல்லி:அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக இயங்கி வரும் வர்த்தகம் மற்றும் தடயவியல் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க், இந்திய தொழில்துறையில் கோலோச்சி வரும் அதானி குழுமத்திற்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
வரி மோசடி மூலம் கிடைத்த பணத்தை ஐக்கிய அரபு அமீரகம், மொரிஷியஸ் போன்ற வரி விலக்கு நாடுகளில் உள்ள போலியான ஷெல் கம்பெனிகளுக்கு மாற்றி, அங்கிருந்து மீண்டும் அதானி நிறுவன பங்குகளில் முதலீடு செய்து, செயற்கையாக அந்நிறுவன சந்தை மதிப்பை, இந்திய பங்குச் சந்தையில் உயர்த்தியதாக ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நாட்டில் பெரும அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பங்குச் சந்தையில் அதானியின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது. உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்வரிசையில் இருந்த அதானி தொடர் சரிவின் காரணமாக 30 இடங்களுக்கு கீழ் இறங்கினார். மேலும் எதிர்கட்சிகள் அதானி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு நாடாளுமன்றக் கூட்டதை முடக்கின.
இந்நிலையில் அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது.