புதுடெல்லி:தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாகப் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு இருந்தது.
இந்நிலையில் திமுகவிற்கு மாறியவர் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் பொறுப்பு வகித்து வந்தார். சமீபத்தில் இவரது சகோதரர் அசோக், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது செந்தில் பாலாஜி, அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் 1.60 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டி இருப்பதாக அமலாக்கத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இதனை அடுத்துக் கடந்த ஜூன் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிகாரப்பூர்வ அறையிலும் சோதனை நடத்தினர். 17 மணி நேரத்திற்கும் மேலாகச் சோதனை நடந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
அமலாக்கத்துறையினர் அவரை அழைத்துச் சென்ற போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியதால் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனை அடுத்து அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். பின்னர் செந்தில் பாலாஜிக்கு இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் தெரியவந்தது.