ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் எனும் தனியார் மருத்துவமனையில் புதிதாக தோல் தானம் செய்யப்படும் வங்கி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தோல் வங்கி குறித்து மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறையைச் சேர்ந்த மருத்துவர் சவாய் மான்சிங் கூறுகையில், ”தோல் தானத்தால் 40 முதல் 50 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும். தீக்காயங்களால் நோயாளியின் உடலில் இருந்து புரதம் மற்றும் மின்னாற்பகுப்பு திரவம் (electrolytic fluid) இழப்பு ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கிறது. இது பெரும்பாலும் தோல் பாதிப்பு காரணமாகவே நிகழ்கிறது.
தோல் மாற்று அறுவை சிகிச்சை மூலம், அத்தகைய நோயாளிகள் புதிய வாழ்க்கையைப் பெற முடியும். அதனை அடிப்படையாக கொண்டே இந்த தோல் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் மைனஸ் 20 டிகிரி முதல் மைனஸ் 70 டிகிரி வரை மனித தோலைப் பாதுகாப்பாக வைக்கலாம். இதன் மூலம் ஆசிட் பாதிக்கப்பட்டவர்களுக்கும், விபத்தில் தீக்காயம் அடைந்தவர்களுக்கும் பயன் கிடைக்கும். மிக முக்கியமாக, ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை தோலைப் பதப்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.
இந்தச் சூழலில் அனிதா கோயல் எனும் பெண்மணி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அனிதாவின் தோலை தானம் செய்யுமாறு மருத்துவர்கள் குடும்பத்தினரை கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டதால், சவாய் மான்சிங் மருத்துவமனையில் முதல் தோல் தானமாக அனிதாவின் தோல் பெறப்பட்டது.
இதையும் படிங்க:இனி மலேரியாவுக்கு குட் பாய் சொல்லுங்க! வந்துருச்சி புதிய மருந்து