காஸ்கஞ்ச் :உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் பௌத்த மாநாடு இன்று(ஜன.10) நடைபெற்றது. இந்த மாநாட்டில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியா பங்கேற்றார். மாநாட்டுக்குப் பின்னர் பிரசாத் மௌரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த 1990ஆம் ஆண்டு அயோத்தியில் ராம் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்குப் பின் துணை நின்று செயல்பட்டவர்களும் தற்போது அயோத்தியில் உள்ள ராம் மந்தீருக்கு வரவேற்கப்படுகிறார்கள் என மத்திய அமைச்சர் எஸ்பி சிங் பாகேல் கூறியது குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "இந்தச் சம்பவத்தின் போது முலாயம் சிங் சமாஜ்வாதி கட்சியில் பொறுப்பில் இருந்தார். 1990ஆம் ஆண்டு சட்டத்திற்குப் புறம்பாக பொது அமைதிக்கு பங்கம் வகிக்கும் வகையில், ரகளையில் ஈடுபட்ட சிலர் மீது அப்போதைய ஆட்சியில் இருந்த முலாயம் சிங் யாதவ் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மாநிலத்தின் பொது அமைதியை நிலைநாட்டுவதற்கும், சட்டத்தின் கடமையை நிறைவேற்றுவதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காகவே போராட்டத்தில் ஈடுபட்ட கரசேவகர்கள்(தன்னார்வலர்கள்) மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அந்த நடவடிக்கையானது சட்டத்தின் கடமையாகும்" எனத் தெரிவித்துள்ளது புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
அதைத்தொடர்ந்து, அயோத்தி ராம் மந்தீர் திறப்பு விழாவை பாஜக அரசியல் செய்து வருகிறது என்று எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "எங்களைப் பொறுத்தவரையில் எம்மதமும் சம்மதம். ஆனால் பாஜக இதன் மூலமும் ஆதாயம் தேடுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தான் இறுதியாக முடிவுசெய்தது. நாட்டிலுள்ள அனைத்து எதிர்கட்சிகளும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றது. அவ்வாறு இருக்கையில் எந்த கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், பாஜக இதனை வெவ்வேறு கோணங்களில் திசைதிருப்பி அரசியல் ஆதாயம் பெற முயல்கிறது. இத்தகைய வலிமையோங்கிய பாஜக மூன்றுமுறை ஆட்சியில் இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் ராமர் கோயிலை கட்டாததற்கான காரணம் என்ன..?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, ராம் லல்லா(ராமர் கோயில்) திறப்பு விழாவில் கலந்துகொள்வீர்களா என்று கேட்டதற்கு, "அயோத்தியில் தற்போது கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழா ராம் லல்லா தலைமையில் நடைபெறாமல், பாஜக தலைமையிலே நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையில் நடத்தப்படும் எந்த நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்க மாட்டேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக நாட்டை விற்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக சிறுபான்மையினர் மற்றும் இந்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தி வருகிறது. நாட்டு மக்களின் நம்பிக்கையில்லாமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மட்டுமே மூலத்தனமாகக் கொண்டு வெற்றி பெற்றனர்" என்று கடுமையாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க:"முரசொலி நாளிதழ் குறித்து நீதிமன்றத்தின் அறிவிப்பு குறித்து எனக்கு தெரியாது" - அமைச்சர் துரைமுருகன்!