போபால்: 'அயோத்தியில் சூரிய உதயம் - நம் காலத்தில் தேசம்' (Sunrise over Ayodhya-Nationhood in our times) என்ற காங்கிரஸ் மூத்தத் தலைவர் சல்மான் குர்ஷித்தின் சர்ச்சைக்குரிய புத்தகம் தங்கள் மாநிலத்தில் தடைசெய்யப்படும் என மத்தியப் பிரதேச உள் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா இன்று (நவம்பர் 12) சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் காங்கிரசை கடுமையாக விமர்சிக்கும் மிஸ்ரா, அக்கட்சித் தலைவர்கள் இந்துத்துவாவை மட்டுமே அவதூறு செய்வதாகவும், சல்மான் குர்ஷித்தும் அதையேதான் செய்தார் என்றும் குற்றஞ்சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், "குர்ஷித் கண்டனத்திற்குரிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் இந்துத்துவாவை இழிவுப்படுத்துவதோடு, இந்துக்களையும் பிளவுப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இதற்கு முன்னர் கமல் நாத் இந்தியா மதிப்பில்லாதது என்று கூறியிருந்தார். ராகுல் காந்தி நாட்டைத் துண்டாடும் கும்பலுக்கு ஆதரவளித்தார். காங்கிரஸ் எப்போதும் நமது நம்பிக்கையின் மீது தாக்குதலைத் தொடுக்கிறது" என்றார்.
'சல்மான் குர்ஷித் தனது புத்தகத்தில் இந்துத்துவாவை ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டுள்ளார், இது நியாயமற்றது' என்று குற்றஞ்சாட்டும் பாஜக, நைஜீரியாவில் 2009 முதல் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.