கரோனா வைரஸ் காரணமாக சபரிமலை கோயிலில் தற்போது குறைந்த அளவிலான பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இச்சூழலில் பக்கதர்களின் வீட்டிற்கே சபரிமலை பிரசாதம் டெலிவரி செய்ய இந்திய அஞ்சல் துறை முடிவுசெய்துள்ளது.
இது குறித்து அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, நாட்டில் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அஞ்சல் துறையின் பரந்த வலையமைப்பைப் பயன்படுத்தி பக்தர்களின் வீடுகளுக்கு சபரிமலை கோயிலின் பிரசாதத்தை வழங்குவதற்கான ஒரு விரிவான முன்பதிவு, விநியோகத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு பக்தர்கள் இந்தியாவின் எந்த அஞ்சலகத்திலிருந்தும் 450 ரூபாய் செலுத்தி சபரிமலை கோயில் பிரசாதத்துக்காக முன்பதிவு செய்யலாம். அதில், அரவணை பாயசம், விபூதி, ஆடியாசிஷ்டம் நெய், மஞ்சள், குங்குமம், அர்ச்சனை பிரசாதம் ஆகியவை இருக்கும். பக்தர்கள் ஒரேசமயத்தில் பத்து பாக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரைவு அஞ்சலின்கீழ் சபரிமலை பிரசாதத்தை முன்பதிவு செய்தவுடன், விரைவு அஞ்சல் எண்ணுடன் ஒரு செய்தி, பக்கதர்கள் பதிவுசெய்த கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும் என்றும், அதன்மூலம் பிரசாதத்தின் வருகையைத் தெரிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கார்த்திகை பௌணர்மியை முன்னிட்டு ஜொலித்த சபரிமலை!