பத்தனம்திட்டா: ஆந்திர மாநில அரசுப் பேருந்தை ஏற்பாடு செய்து, அதன் மூலமாகத் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் குழு ஒன்று சபரிமலைக்குத் தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது, அந்த குழுவில் தந்தை மற்றும் பாட்டியுடன் வந்த நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது சிறுமி பவ்யாவை உடன் அழைத்துச் செல்ல மறந்து பேருந்திலேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், பம்பையில் இறங்கி பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றபோது சிறுமி பவ்யாவை காணவில்லை என்பது தெரிய வந்துள்ளது. உடனே குழந்தையின் தந்தை பம்பையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, இது குறித்து புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து துரிதமாகச் செயல்பட்ட போலீசார், வயர்லெஸ் மூலமாகத் தகவலைப் பகிர்ந்துள்ளனர்.
அந்த தகவல் கிடைத்ததும், நிலக்கல் - பம்பா வழித்தடத்தில் ரோந்துப் பணியில் இருந்த அடிங்கல் உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் (AMVI - Assistant Motor Vehicle Inspector) ஆர்.ராஜேஷ், குன்னத்தூர் உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் ஜி.அனில்குமார் ஆகியோர் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், சிறுமியின் தந்தை கூறிய தகவலின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட ஆந்திர பேருந்தைத் தேடினர். அவர்கள் செல்லும் வழியில் பேருந்தைக் கண்டுபிடித்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அனைவரும் பம்பையில் இறங்கி விட்டதாகவும், பேருந்தில் யாரும் இல்லை என்றும், நிலக்கல் பகுதியில் பேருந்தை நிறுத்தச் செல்வதாகவும் பதிலளித்தனர்.
இதன் பின்னர் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பேருந்துக்குள் சோதனை செய்தபோது, பேருந்தின் பின் இருக்கைக்கு முன்னால் உள்ள மூன்று இருக்கைகள் கொண்ட இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியைக் கண்டுள்ளனர். அதனை அடுத்து, அந்த சிறுமியை மோட்டார் வாகனத் துறையின் வாகனத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியின் தந்தை மற்றும் பாட்டி போலீசாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, சிறுமியை அழைத்துக் கொண்டு சன்னிதானம் நோக்கி பயணத்தைத் தொடர்ந்தனர். மேலும், தகவல் அறிந்ததும் துரிதமாகச் செயல்பட்டு சிறுமியைக் கண்டுபிடித்துக் கொடுத்த போலீசாரின் செயல், அந்த சிறுமியின் பெற்றோர் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இறந்தும் உயிர் வாழும் ஆசிரியர்.. மூளைச்சாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானம்!