தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சபரிமலையில் பெண்களுக்கும் அனுமதியா? - சர்ச்சைக்கு அமைச்சர் விளக்கம்! - தேவசம் போர்டு அமைச்சர் விளக்கம்

சபரிமலையில் காவல் துறைக்கு வழங்கப்பட்ட கையேட்டில், அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் சர்ச்சை கிளம்பியது. இது தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும், இதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தேவசம் போர்டு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Sabarimala:
Sabarimala:

By

Published : Nov 17, 2022, 6:29 PM IST

பத்தினம்திட்டா: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி வழங்கி, கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சபரிமலைக்குச் செல்ல சில பெண்கள் முயற்சித்தபோதும், பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், கார்த்திகை மாதம் இன்று(நவ.17) தொடங்கியுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். சபரிமலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலீசார் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள கையேட்டில், கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அனைத்து பக்தர்களும் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவினர் கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சபரிமலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கேரள தேவசம் போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், "இந்த கையேடு முன்னதாக அச்சிடப்பட்டது. இந்த ஆண்டு கையேட்டில் ஏதேனும் தவறுதலாக இடம்பெற்றிருந்தால், அதை திரும்பப்பெற அறிவுறுத்தப்படும். இந்த விவகாரத்தில் அரசுக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன், 'இந்த விஷயத்தில் கேரள அரசுக்கு ஏதேனும் உள்நோக்கம் இருந்தால், அதை கைவிடுவது நல்லது. சபரிமலையை மீண்டும் போர்க்களமாக்க முயற்சித்தால், கடந்த காலத்தை நாங்கள் மறக்கவில்லை என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்’ என்றும் குறிப்பிட்டார்.

இந்த விஷயத்தில் அரசு பின்வாங்கிவிட்டது என்றும்; பிரச்னையை மீண்டும் கையில் எடுக்க விரும்பினால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: மண்டல பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details