மாஸ்கோ:ரஷ்ய அதிபர் புதின் மட்டும் பயன்படுத்தும் வகையிலான ஆடம்பர ரயில் குறித்த தகவல்கள் வெளியாகி வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விமானம் மற்றும் சாலை வழி போக்குவரத்துகளை தவிர்த்து வருவதாகவும், அதேநேரம் உள்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இன்றி பயணிக்க ஆடம்பர ரயிலை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புதினை தவிர வேறு யாரும் இந்த ஆடம்பர சிறப்பு ரயிலை பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது. ஏறத்தாழ 22 பெட்டிகள் கொண்ட இந்த "Ghost Train" பேய் ரயிலின் ஆடம்பரமான உள்புறத்தின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளளன. லண்டனைச் சேர்ந்த ரஷ்ய விசாரணைக் குழுவான டோசியர் சென்டர் (Dossier Center) என்ற நிறுவனம் இந்த பேய் ரயில் தொடர்பான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பேய் ரயில் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள், குண்டு துளைக்காத கதவு, மற்றும் ஜன்னல்களை என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளதாகவும், ரயிலில் உயிர் காக்கும் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் என அனைத்து வசதிகள் இருப்பதாகவும் அந்நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிபர் புதின் உள்நாட்டிற்குள் வசதியாகவும், ரகசியமாகவும் பயணிக்க இந்த ரயில் கடந்த 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகவும், இந்த ரயிலில் முழுமையான உடற்பயிற்சிக் கூடம், மசாஜ் சென்டர், முழுமையான துருக்கிய குளியல் நீராவி அறை, படுக்கையறைகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட டைனிங் அறைகள், ஆலோசனைக் கூடங்கள் என பல்வேறு வசதிகள் இருப்பதாக ஆங்கில ஊடகமான சி.என்.என் செய்தி வெளியிட்டு உள்ளது.
இந்த சொகுசு ரயிலில் புதின் கவனித்துக் கொள்ள அழகு நிபுணர் அலுவலகம், உடற்பயிற்சி வல்லுநர்கள் உள்ளிட்டோர் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திரையரங்கம், முழு கார் ஹவுசிங் டீசல் பவர் ஜெனரேட்டர் உள்ளிட்ட அதநவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வெளி உலகத்துடன் அதிபர் புதின் தொடர்பில் இருக்க ஏதுவாக சாட்டிலைட் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புடன் கூடிய பல்வேறு அம்சங்கள் இந்த ரயில் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. முக்கிய ஆலோசனைக் கூட்டங்களின் போது ரகசிய அறையில் நடக்கும் உரையாடல்களை மற்றவர்கள் கேட்க முடியாத வகையில் சவுன்ட் ஃப்ரூபிங் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ 74 மில்லியன் டாலர் செலவில் இந்த ரயில் கட்டமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் ஆண்டு பராமரிப்பு செலவு மட்டும் இந்திய மதிப்பில் 130 கோடி ரூபாய் வரை செலவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து அதிபர் புதினுக்கு ஏற்பட்டு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த ரயில் தொடர்பான தகவல்களை மறுத்துள்ள ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளின், அதிபர் புதினிடம் இது போன்ற எந்த ரயிலும் இல்லை என்று தெரிவித்து உள்ளது. இந்த ரயிலை இயக்குவதற்காக ஏராளமான பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதாகவும் நாடு முழுவதும் உள்ள நகரங்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்த ரயிலுக்காக பிரத்யேக வழித்தடம் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க :ரஷ்ய அதிபர் - வாக்னர் குழு சந்திப்பு.. நாட்டுக்காக மீண்டும் போராட தயார் என வாக்னர் குழு தகவல்!