தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை...? - ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்

உக்ரைன் - ரஷ்யப்போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் ஓரிரு நாட்களில் இந்தியா வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

russian-foreign-minister
russian-foreign-minister

By

Published : Mar 29, 2022, 6:58 PM IST

உக்ரைன்-ரஷ்யப்போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. பதிலுக்கு ரஷ்யாவும் பல்வேறு தடைகளை விதித்தது. இதனால் உலகம் முழுவதும் பொருளாதார ரீதியான தாக்கம் ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகத்தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதனிடையே உக்ரைன், ரஷ்யா இருநாடுகளுக்கும் ஆதரவு அளிக்காமல் இந்தியா நடுநிலையாக செயல்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து முக்கிய அலுவலர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

அண்மையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இந்தியா வந்தார். அதேபோல், அமெரிக்காவின் அரசியல் விவகாரங்கள் குழு துணைச்செயலர் விக்டோரியா நுலாண்ட், ஆஸ்திரியா மற்றும் கிரீஸ் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்தடுத்து இந்தியா வந்தனர். பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் வரும் 31ஆம் தேதி இந்தியா வருகிறார்.

இதனையடுத்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லவ்ரோவ் அடுத்த சில நாட்களில் இந்தியா வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 31ஆம் தேதி டெல்லி வரவுள்ளதாகவும், 1ஆம் தேதி இந்திய அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யப்போருக்குப்பிறகு முதல்முறையாக இந்தியா-ரஷ்யா இடையே ஆலோசனை நடைபெறவுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவத்தளவாடங்கள் வாங்கும் விவகாரத்தில், எந்த பண மதிப்பில் இருநாடுகளும் வர்த்தகம் செய்யும் என்பது குறித்து உயர்மட்ட ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, ரஷ்யாவுடன் நட்பற்ற நாடுகள், கச்சா எண்ணெய் அல்லது எரிவாயு விற்பனைக்கு டாலருக்கு பதில் ரஷ்யாவின் நாணயமான ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என அதிபர் புதின் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்தியப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: பாரத் பயோடெக் எம்டி கிருஷ்ணா எல்லா பத்ம பூஷண் விருதுபெற்றார்!

ABOUT THE AUTHOR

...view details