கீவ் :உக்ரைனின் பக்முத் நகரை ரஷ்ய ராணுவம் ஆதரவுபெற்ற வாக்னர் தனியார் ராணுவக் குழு கைப்பற்றியதாக ரஷ்யா பாதுகாப்புத் துறை தெரிவித்து உள்ளது. வாக்னர் ராணுவக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோசன் (Yevgeny Prigozhin) பகுமுத நகரம் முழுவதும் ரஷ்யப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக தனது டெலிகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டது. ராணுவ நடவடிக்கை தொடங்கி ஓராண்டு கடந்த நிலையிலும், போர் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய ராணுவத்தினர் வீசிய குண்டு மழை, உக்ரைனின் உள்கட்டமைப்புகளை உருக்குலைத்தன.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா, மேற்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள், நேரடியாகவும், மறைமுகமாகவும் உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றன. ரஷ்யாவின் போரால், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் சொந்த வீடுகளை இழந்து அகதிகளாக உள்நாட்டிலும், அண்டை நாடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.
சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு உதவுவதாக தகவல்கள் கூறப்படுகின்றன. ஈரான் கொடுத்த அதிநவீன ட்ரோன்களை கொண்டு உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொடுத்த ராணுவத் தளவாடங்களை ரஷ்யா அழித்ததாக சொல்லப்படுகின்றன. இந்நிலையில், உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவத்தின் கூலிப் படை அமைப்பான வாக்னர் தெரிவித்து உள்ளது.