அமராவதி : மகாராஷ்டிரா புல்தானா பேருந்து விபத்தில், அதிவேகம் அல்லது டயர் வெடித்ததால் பேருந்து விபத்து ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை என வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் சம்ருதி விரைவுச் சாலையில் இன்று (ஜூலை. 1) பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மொத்தம் 33 பேர் பேருந்தில் பயணம் செய்ததாக கூறப்படும் நிலையில், 7 பேர் தீ மற்றும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விபத்து குறித்த வட்டார போக்குவரத்து அலுவலரின் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் அதிவேகம் அல்லது டயர் வெடித்ததன் காரணமாக பேருந்து விபத்துக்குள்ளானதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் விபத்து நடந்த இடத்தில் ரப்பர் துண்டுகள் அல்லது டயர் பதிந்ததற்கான தடங்கள் எதுவும் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் டயரின் டிஸ்க் பகுதி வளைந்து காணப்பட்டதாகவும் அதன் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் விபத்தில் இருந்து உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில், சாலையின் வலது பக்க ஸ்டீல் கம்பத்தில் பேருந்து மோதியதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், சாலை நடுவில் உள்ள தடுப்பில் முட்டி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பேருந்தின் முன்பக்க டயர், சாலை தடுப்பில் அதிவேகமாக மோதியதில் அச்சு முறிந்து இடமாறி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பேருந்தின் வலது பக்கம் டீசல் டாங்க் உள்ள நிலையில், சாலை தடுப்பில் அதுவும் மோதியதால் தீ பிடித்து கோர சம்பவமாக மாறியதாக கூறப்பட்டு உள்ளது.