நாக்பூர்:ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் மாதவ் கோவிந்த் வைத்யா (97) வயது முதிர்வு காரணமாக தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னதாக மாதவ் கோவிந்த் வைத்யா மறைவிற்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது. மாதவ் கோவிந்த் வைத்யா ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சிந்தனைவாதியாக திகழ்ந்தவர். இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது மறைவிற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இரங்கல் தெரிவித்துள்ளார். மாதவ்வின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் மோகன் பாகவத், “எம்ஜி வைத்யா, சங்கத்தின் சித்தாந்தத்தை காப்பாற்றி வாழ்ந்து வந்தார். அவர் ஆர்எஸ்எஸ்ஸின் கலைக்களஞ்சியமாக இருந்தார். அவரது மரணத்தால் ஒரு வெற்றிடமும் உருவாகியுள்ளது. நாங்கள் ஒரு பாதுகாவலரை இழந்துவிட்டதாக உணர்கிறோம்.
நாங்கள் அவரிடமிருந்து ஆலோசனையைப் பெற்றோம். இப்போது, யாரிடம் ஆலோசிக்க வேண்டும் என்ற குழப்பம் உள்ளது. வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு. அவர் இல்லாததை உணர்ந்துவருகிறோம்” என்றார்.