ஹைதராபாத் (தெலங்கானா): ஆண்டுதோறும் நடைபெறும் சதர் திருவிழாவிற்கு ஹைதராபாத் தயாராகி வருகிறது.
ஹரியானாவில் இருந்து எருமைகள் ஏற்கனவே நகருக்கு வந்துள்ளன. 30 கோடி மதிப்பிலான ஷாருக் என்ற பிரமாண்ட எருமை திருவிழாவின் சிறப்பம்சமாக இருக்கும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு எருமைக்கும் உணவு மற்றும் பராமரிப்புக்காக 15,000 ரூபாய் செலவிடப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர். நவம்பர் 5, 7 ஆகிய தேதிகளில் முறையே கைரதாபாத், நாராயணகுடா ஆகிய இடங்களில் திருவிழா நடைபெறுகிறது.
தெலங்கானாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் எருமை திருவிழா ஹைதராபாத்தின் சிறப்பாகும். தீபாவளிக்கு மறுநாள் இத்திருவிழா நடைபெறுகிறது. இந்த விழா யாதவர் சமூகத்தினரால் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஹைதராபாத், ஹரியானா, பஞ்சாப் முழுவதிலும் இருந்து எருமை மாடுகள் திருவிழாவின் போது காட்சிப்படுத்தப்படுகின்றன. சிறப்பு வாய்ந்த ஷாருக்,லவ் ராணா ஆகிய எருமைகள் ஏற்கனவே ஹைதராபாத் வந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் திருவிழாவிற்கு அதிக எருமைகள் வரும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சதர் திருவிழாவை கலக்கும் சாருக் ஷாருக் எருமை
ஷாருக் எருமைக்கு மூன்றரை வயது. அதன் எடை 1,800 கிலோ. லவ் ரானா எருமைக்கு 4 வயது. அதன் எடை 1,700 கிலோ. இரண்டு எருமைகளுக்கும் காலையிலும், மாலையிலும் 10 லிட்டர் பால் கொடுக்கப்படுகிறது. அவைகளின் உணவில் பிஸ்தா, முந்திரி, பாதாம், ஆப்பிள் மற்றும் 40 முட்டைகள் அடங்கும்.
வழக்கமான நாட்களில் அவற்றின் பராமரிப்புக்கு ரூ.7000 முதல் 8,000 வரை செலவாகும். ஆனால் சதர் பண்டிகையின் போது இதன் உரிமையாளர்கள் ஒரு நாளைக்கு ரூ.15,000 செலவிடுகின்றனர். எள் எண்ணெய் மூலம் ஒரு நாளைக்கு இரண்டு முறை மசாஜ் செய்கின்றனர்.
காலையில் நடைபயிற்சிக்கும் மாலையில் நீச்சலுக்கும் அழைத்துச் செல்லகின்றனர். வாரம் ஒருமுறை, 3,000 ரூபாய் மதிப்புள்ள ஜானி வாக்கர் முழு பாட்டில் ஸ்காட்ச் விஸ்கி மதுபானமும் வழங்கப்படுகிறது. ஷாருக்கின் மதிப்பு ரூ 30 கோடி, லவ் ராணா ரூ 20 கோடி என அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மது யாதவ், "தெலுங்கு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு சதர் கொண்டாட்டங்கள் சரியாக நடத்தப்படவில்லை. இந்த முறை சிறப்பு ஏற்பாடுகளுடன் சதர் திருவிழா நடத்தப்படவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வீடியோ: ஒரு கிலோ ஸ்வீட்ஸ் 25000 ரூபாயாம்! அப்படி என்ன இருக்கு அதுல?