வாரணாசி (உத்தரப் பிரதேசம்): இரு நூற்றாண்டுகள் நேரடி ஆங்கிலேய ஆட்சியின்கீழ் இருந்த இந்தியா, 1947 ஆகஸ்ட் 15 அன்று விடுதலைப் பெற்றது. நாடு விடுதலைப் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும்விதமாக அரசு ஆசாதி கா அமிரித் மகோதவ் (Azadi Ka Amrit Maho-utsav) என்ற பெயரில் சிறப்புக் கொண்டாட்டங்களை மேற்கொண்டுவருகிறது.
இந்தியாவின் பெருமைமிக்க வரலாற்றையும், வரலாற்றுப் பக்கங்களில் மறைந்துபோன வீரர்களையும் மீண்டும் நினைவில் கொண்டுவந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதே இதன் நோக்கம். பெருமைமிக்க வீரர்களின் வரலாற்றைப்போல, விடுதலைப் போருடன் தொடர்புடைய இடங்களை நினைவில் கொள்வதும் அவசியமாகும். அவற்றில் ஒன்றுதான் பாரத் மந்திர்.
பாரத் மந்திர் (பாரத கோயில்)
இது குறித்து பாரத் மந்திர் கோயில் நிர்வாகி ராஜு சிங் கூறுகையில், “இது ஒரு கோயில், இந்தக் கோயிலுக்குள்ள நுழைஞ்சா நீங்க எந்த சாமியோட சிலையையோ அல்லது படத்தையோ பார்க்க முடியாது. ஒரு மார்பிள் மேப்தான் இருக்கும். 1917ஆம் ஆண்டு வரையப்பட்ட இந்த த்ரீ டி மேப், பிரிக்கப்படாத இந்தியாவோடது. இந்த மேப்ல, கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இந்த நாடுகளெல்லாம் ஒருங்கிணைஞ்சு இருக்குற இந்தியாவ பார்க்கலாம்.
பனாரஸ்ல இருக்குற இந்த அற்புதமான கோயில் கட்டட கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ரெட் ஸ்டோன், மக்ரானா மார்பிள் இதெல்லாம் வச்சு இந்தக் கட்டடத்தைக் கட்டுனாங்க. 1917ஆம் வருஷம் அண்ணல் காந்திட்ட ஒப்புதல் வாங்கி, பாபு ஷிவ் பிரசாத் குப்தா இந்தக் கோயில கட்டுனாரு” என்றார்.
அஞ்சிய ஆங்கிலேய அரசு
பாரத் மந்திர், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 1924ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் மக்கள் எழுச்சிக்கு அஞ்சிய ஆங்கிலேய அரசு இந்தக் கோயிலைத் திறக்க அனுமதி தரவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பின், 1936ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அண்ணல் காந்தி இந்தக் கோயிலை திறந்துவைத்தார்.