நம்மில் பலர் பயணத்தை மிகவும் விரும்புகிறோம்; ரசிக்கிறோம். பயணங்கள் நம் மனதினை மாற்றும், நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தொடங்கும் ஒவ்வொரு பயணமும் அதன் இலக்கை நாம் எண்ணிய வழியில் அடைவதையே விரும்புகிறோம். அந்த எண்ணத்திலேயே பயணத்தையும் தொடங்குகிறோம். ஆனால் அதுபோன்ற ஒரு பயணத்தில் வாழ்க்கை என்னும் பயணமே முடிந்து விடுவதை விட மாபெரும் கொடுமை வேறு உண்டா? சாலைப் பாதுகாப்பு என்பது இந்த நாட்டில் ஒரு மாயமானைப் போல ஆகிவிட்டது. சாலை விபத்து லட்சக் கணக்கான குடும்பங்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தப் போக்கின் தொடர்ச்சியாக, சமீபத்தில் விசாகப்பட்டினத்துக்கு அருகில், பேருந்து ஒன்றுஓர் ஆபத்தான வளைவைக் கடக்கும் போது 200 அடி ஆழத்தில் விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்கள் ஆந்திராவின் அரக்குப்பள்ளத்தாக்குச் சுற்றுலா தலத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள். உயிரிழந்தவர்கள் அனைவரும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள். அந்த விபத்தைத் தொடர்ந்து அதே ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடந்த மற்றொரு விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
கடந்த மாதம் கர்நாடகத்தில் ஒரு சாலை விபத்தில் 13 இளம்பெண்கள் பலியாகி உள்ளனர். குஜராத் மாநிலத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 15 கூலித் தொழிலாளர்கள் வேகவேகமாக வந்த ஒரு மோட்டார் வண்டியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிர் இழந்திருக்கின்றனர். இந்தக் கொடூர விபத்தின் அதிர்ச்சியிலிருந்து தேசம் மீள்வதற்கு முன்னமே, மேற்கு வங்காளத்தில் நடந்த சாலை விபத்து ஒன்றில் 14 பேர் பலியாகி விட்டனர். இந்த மாதிரியான சாலை விபத்துகளின் பட்டியல் அனுமன் வால் போல நீண்டு கொண்டே இருக்கிறது.
தேசத்தில் ஒவ்வொரு நாளும் நடக்கும் பல்வேறு சாலை விபத்துக்களில் சராசரியாக415 பேர் கொல்லப்படுகிறார்கள். அதைப் போல, விபத்துக்களில் சிக்கி கைகால் இழந்து முடமாகுபவர்களின் எண்ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு மூன்றரை லட்சத்தைத் தாண்டும். உலகத்தில் உள்ள மோட்டார் வாகனங்களில் ஒரு விழுக்காடு தான் இந்தியாவில் ஓடுகின்றன. ஆனால் உலகத்தில் நடக்கும் மொத்த சாலை விபத்துக்களில் ஆறு விழுக்காடு இந்தியாவில் நிகழ்கின்றன.
சாலை விபத்துக்களைப் பொறுத்த வரையில் இந்தியாவும் ஜப்பானும் ஒரே நிலையில் தான் இருக்கின்றன. என்றாலும், ஜப்பானில் வருடத்திற்கு ஐந்தாயிரத்திற்கும் குறைவான மக்களே சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கிறார்கள். மாறாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒன்றரை லட்சத்தைத் தாண்டுகின்றன.
நம்மிடம் சாலைப் பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கும் பழக்கம் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் இந்தக் காலக்கட்டத்திற்குள் சாலை விபத்துப் பலிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்திருக்கிறது. அதனால் மக்களின் உயிர் வாழும் உரிமை பெரும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. கரோனா என்னும் தொற்று நோயை விட அதிகமான ஆபத்தைக் கொண்டதாக சாலை விபத்துகளை மத்திய அரசு பார்க்கிறது. ஆனால் இந்த அபாயகரமான பிரச்னையைத் தீர்ப்பதற்கு அது சரியான நடவடிக்கைகளை போதுமான அளவுக்கு எடுத்திருக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.