டெல்லி:டெல்லி பிரகதி மைதானத்தில் வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக உலகத் தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கு தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றனர். முக்கியமாக, இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக டெல்லியில் பலத்த பாதுகாப்பும், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக, டெல்லி விமான நிலையம் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷீ மற்றும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சவுராப் பரத்வாஜ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அதீஷி, “டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டை ஒட்டி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவை செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 10 வரை மூடப்படும். ஐடிபிஓ (ITPO) வளாகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை மத்திய அரசின் நிதி உதவியுடன் கட்டமைக்கப்பட்டது.
ஆனால், சுரங்கப்பாதையின் ஒட்டுமொத்த வளாகமும், ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடமும் மாநில பொதுப்பணித் துறையால் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இது புரானா குயிலாவில் இருந்து ரிங் ரோட்டுக்குச் செல்லும் வழித்தடத்தை உருவாக்கி உள்ளது. மேலும், இதன் மூலம் ஜி20 பிரதிநிதிகள் நுழையும் ஐடிபிஓ வளாகத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது.
இது எதிர்காலத்திற்கும் பயனளிக்கும். ஜி20 மாநாட்டை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 1.5 லட்சம் மரக்கன்றுகள் மாநில அரசால் நடப்பட்டு உள்ளது. 30 இடங்களில் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு உள்ளது. நகரத்தில் 80 முதல் 90 சிலைகள் நிறுவப்பட்டு உள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன், கிரேட்டர் கைலாஷ் 2 மற்றும் மெஹ்ராவ்லி ஆகிய சந்தைகளை அழகுபடுத்தி உள்ளது.
தற்போது, ஜி20 பிரதிநிதிகளை வரவேற்க டெல்லி தயார் நிலையில் இருக்கிறது. டெல்லியில் விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகளால் டெல்லிவாசிகள் சின்ன சின்ன இடையூறுகளைச் சந்திக்கலாம். ஆனால், நாட்டிற்கு கிடைத்துள்ள ஜி20 தலைமைக்கான வாய்ப்பை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.
மேலும், ஜி20 மாநாட்டை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “செப்டம்பர் 8 முதல் 10 வரை அதிகாலை 4 மணி முதல் டெல்லியில் மெட்ரோ சேவை இயங்கும். வழக்கம்போல அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும். ஆனால், பாதுகாப்பு காரணங்களால் உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் ரயில் சேவை செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களுக்கு கிடையாது.
அதேபோன்று, உச்ச நீதிமன்றம், படேல் சவுக் மற்றும் ராம கிருஷ்ணா ஆசிரம் மார்க் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் செப்டம்பர் 8 அதிகாலை 4 மணி முதல் செப்டம்பர் 11 இரவு 12 வரை வாகன நிறுத்தங்களுக்கு அனுமதி இல்லை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:“பிரம்மாண்ட நடராஜர் சிலை இந்தியாவின் கலைத்திறனுக்கு ஒரு சான்றாக அமையும்" - பிரதமர் மோடி பெருமிதம்!