டெல்லி:2024ஆம் ஆண்டில், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்த வியூகங்களை வகுக்கும் பொருட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில், புதன்கிழமை (ஜூன் 28) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 5 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா, கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சிக்குள் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள போதிலும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும், இதுவரை வெளியாகவில்லை. பிரதமர் மோடி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, திரும்பிய சில நாட்களில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகியோர் அமைப்பு மற்றும் அரசியல் விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த முக்கியப் பிரமுகர்கள் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தைத் தொடர்ந்து, பிரதமர் இல்லத்தில் அந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, தனது சமீபத்திய உரைகளில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு குறித்து பேசி வருகின்றார். இந்த திட்டம், பாரதிய ஜனதா கட்சியின் நீண்டகால தேர்தல் வாக்குறுதியாக தொடர்ந்து வருவது நினைவுகூரத்தக்கது. பிரதமர் மோடி, இந்த விவகாரம் குறித்து, தற்போது மிகத் தீவிரமாகப் பேசி வருவது, விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அக்கட்சியின் உறுதியான நிலைப்பாடாக இது இருக்கும், என்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.