டெல்லி : உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி நியமனம் செய்ய பிஎச்டி என்ற முனைவர் பட்டம் தகுதி கட்டாயம் இல்லை என பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி அறிவித்து உள்ளது.
உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர்களாக பணிபுரிய முதுகலை படிப்புடன், பிஎச்எடி எனப்படும் முனைவர் படிப்பும் கட்டாயம் என பல்கலைக்கழக மனியக் குழுவான யுஜிசி அறிவித்து இருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு உதவிப் பேராசிரியராக பணி நியமனம் செய்ய முனைவர் படிப்பு கட்டாயம் என்று யுஜிசி அறிவித்தது.
ஏற்கெனவே முனைவர் படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு 3 ஆண்டு கால அவகாசம் வழங்கி பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டது. இந்நிலையில், உதவி பேராசிரியராக பணியாற்ற முதுகலை படிப்புடன், தேசிய தகுதித் தேர்வான நெட் (NET), மாநில தகுதித் தேர்வு செட் (SET), மாநில அளவிலான தகுதித் தேர்வு ஸ்லெட் (SLET) ஆகிய ஏதாவது ஒரு தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று தெரிவித்து உள்ள பல்கலைக்கழக மானியக் குழு, அதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த திருத்தப்பட்ட உத்தரவு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்து உள்ளது.