டெல்லி:குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் அணிவகுப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்கான தோற்றத்தில் வலம் வருவர். தொடர்ந்து முப்பைடை மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் செல்லும்.
வரும் 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா அணிவகுப்புக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஊர்தி வடிவமைப்பின் மாதிரிகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் ஊர்தி கட்டமைக்கும் பணிகள் நடைபெற்றன.
தொடர்ந்து டெல்லி கடமையின் பாதையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. விழாவில் முப்படை வீரர்கள், பாதுகாப்புப் படையினர் கலந்து கொண்டு மிடுக்கான தோற்றத்தில் வலம் வந்தனர். தொடர்ந்து விமானப் படை விமானங்கள் சாகச நிகழ்வுகளில் ஈடுபட்டன.
பல்வேறு துறைகள் மற்றும் மாநில அரசுகள் எல்லைப்பாதுகாப்பு படைகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றன. மாநில அலங்கார ஊர்திகளில், அந்தந்த மாநிலங்களின் கலாசாரம் மற்றும் பண்பாடு குறித்த கருத்துகள் அங்கம் வகித்தன. தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி, பெண்களை மையப்படுத்தியதாக இருந்தது.