ஹைதராபாத்: தெலங்கானாவின் பல பகுதிகளில் நேற்று (ஜூலை 24) காலை 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை பலத்த மழை பெய்தது. ஹைதராபாத் நகரில் நேற்று மாலை 5.30 மணியளவில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. ஆறு மணி நேரத்தில் மியாப்பூரில் 3.65 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேநேரம், சார்மினார் மற்றும் சரூர் நகர் பகுதிகளில் இரவு 7 மணியளவில் முறையே 4.78 சென்டி மீட்டர் மற்றும் 4.4 சென்டி மீட்டர் மழை பதிவானது.
நகரத்தில் மழை நீரை வெளியேற்றுவதற்கு அமைக்கப்பட்டுள்ள அமைப்பின் திறனை விட அதிகமான மழை குறைவான நேரத்தில் பெய்ததால் நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. மலாக்பேட்டை மார்க்கெட்டில் இருந்து ரயில் நிலையம் வரை உள்ள பிரதான சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் ஓடியது. முசியில் உள்ள அத்தாப்பூர், சதர்காட், முசாரம்பாக் பாலங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து போலீசார் கோல்நாகா வழியாக வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
கைரதாபாத், பஞ்சகுட்டா, அமீர்பேட்டை, ஹைடெக் சிட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் நெரிசலில் சிக்கின. சித்திப்பேட்டை மாவட்டம் ஹுஸ்னாபாத்தில் இரவு 10 மணி வரை அதிகபட்சமாக 11.7 சென்டி மீட்டர் மழை பதிவானது. வாரங்கல் மாவட்டம் சங்கேமில் 9.0, சூர்யாபேட்டை மாவட்டம் முகுந்தாபுரத்தில் 8.4, ரங்காரெட்டி மாவட்டம் தண்டுமைலராமில் 7.7 சென்டி மீட்டர், ஹைதராபாத்தின் சிவரம்பள்ளியில் 6.48, சார்மினாரில் 6.33 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
முன்னதாக, நேற்றைய முன்தினம் (ஜூலை 23) காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் 10 முதல் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக மஞ்சிரியாலா மாவட்டம் வெல்கனூரில் 16.1 சென்டி மீட்டர் மழையும், பெத்தப்பள்ளி மாவட்டம் கமன்பூரில் 15.2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. கனமழை காரணமாக வாரங்கல் எம்ஜிஎம் மருத்துவமனை வளாகத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், நோயாளிகளின் உதவியாளர்கள் சிரமப்பட்டனர். ஆரோக்யஸ்ரீ வார்டு மற்றும் ஏஎம்சி வார்டு முன் வராண்டாவில் அதிகளவில் மழை நீர் சூழ்ந்தது.
ரெட் அலர்ட்:வங்கக்கடலின் வடமேற்கு பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நாளை மறுநாள் (ஜூலை 27) வரை மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய மாநில இயக்குநர் நாகரத்னா தெரிவித்துள்ளார்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று நாளை (ஜூலை 26) புயலாக மாறி வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தெலங்கானாவின் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சர்ச்சையில் சிக்கிய ஆந்திர முதலமைச்சர் - குறுகிய தொலைவுக்கு ஹெலிகாப்டர் பயணமா?